449. புராதானச் சென்னையின் கட்டுப்பாடற்ற பேருந்துப் பயணங்கள்!
ஜே.எஸ்.ராகவன் என்பவர் எழுதி, சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்த "மலரும் நினைவுகள்" கட்டுரையை (இயன்றவரை நகைச்சுவைக்கு பங்கம் ஏற்படாதவாறு!) தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
********************
இரண்டாம் உலகப்போர் முடிவில், நிலக்கரிக்கு மாற்றாக பெட்ரோல் எரிபொருளாக பயன்படத் துவங்கிய காலத்தில், பூந்தமல்லிக்கும் பிராட்வேக்கும் இடையே, நெரிசல் இல்லாத சாலைகளில் பறந்த அந்த தனியார் பேருந்துகள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளன. ஆங்கிலேயக் கொலையால் 'பூனமல்லே' என்று திரிந்த பூவிருந்தவல்லியைப் பற்றி பேசும்போது, அப்போது அங்கு அமோகமாக வளர்ந்த வெண்பனி நிற மல்லிப்பூவின் வாசம் (என்னையொத்த வயதானவர்களின்) நினைவில் வீசுவதை தவிர்க்க இயலாது!
அக்காலத்தில் பூந்தமல்லி டெர்மினஸில் பேருந்து புறப்படுவதை விசிலடித்து அறிவிக்க ஒரு நேரக் காப்பாளர் (Time Keeper) இருந்தார். ஆனால் ஓட்டுனரோ அவரது விசிலை கண்டு கொள்ளாமல், பேருந்தில் பயணிகள் ஓரளவு நிறைந்த பின்னர் தான் பேருந்தைத் துவக்குவது வழக்கம்! அப்பேருந்துகளின் நடத்துனர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தனர்! சிலர் உருண்டையாகவும், சிலர் 'தொள தொளா' சட்டை / கால்சராயுடனும், இன்னும் சிலர் அழகாக நறுக்கப்பட்ட பென்சில் மீசையுடனும் பார்க்க காமெடியாக இருப்பர் :) அவர்களில் என்னைக் கவர்ந்தவர், வெண்மையான முகத்தில் இங்க் அடித்தது போல தெரியும் ஹிட்லர் மீசையுடன் காணப்பட்ட பழனி என்பவர்.
பெரும்பாலான பயணிகளுடன் பழனிக்கு நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் பட்டணம் செல்வது குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதை பழனி வழக்கமாகக் கொண்டிருந்தார். மவுண்ட் ரோடில் இருந்த ஹிக்கின்ஸ்பாதம் புத்தகக் கடைக்கு என்னுடன் பயணித்த எனது தந்தையாருக்கு, பழனியிடமிருந்து டிக்கெட் பெறுவதில் துளியும் தயக்கம் இருந்ததில்லை. காரணம்: நடத்துனர்களில் பழனி ஒருவர் தான் டிக்கெடைக் கிழிக்க விரலை எச்சில்படுத்துவதில்லை:)
செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு அருகில் இருந்த பட் ரோடு நிறுத்தம் வந்தவுடன், நான் எனது கண்களையும், காதுகளையும் கூராக்கிக் கொள்வேன்! அக்காலத்தில், அவ்விடம் ஒரு குட்டி லண்டன் போல இருந்தது. வட்டமான தொப்பி அணிந்த ஆங்கிலேயக் கனவான்களுடன், கால்கள் தெரியும் விதத்தில் வண்ண வண்ண ஸ்கர்ட் அணிந்த வெள்ளை நிற பெண்மணிகள், அந்த நிறுத்ததிதில் தான் பேருந்தில் ஏறுவர்!
அந்த வெள்ளைக்கார ஜோடிகள் கை கோர்த்தபடி இருப்பர். இந்த கை கோர்த்தல், பொது இடத்தில் செய்யத்தகாத காரியமாக கல்யாணமான இந்தியர்கள் நினைத்த காலம் அது ! சில கனவான்களிடம் பீர் வாசனை அடிக்கும். வெள்ளைக்கார நங்கைகளோ வாசனை திரவிய தொழிற்சாலை போல கமகமவென்று வருவார்கள் !
பட்டணத்திலிருந்து பூந்தமல்லியை நோக்கி ஒரு இரவுப் பயணத்தின்போது, பார்க்க குளிரில் நடுங்கும் எலி போல காணப்பட்ட முனிசிபல் நீதிமன்ற பத்திர வியாபாரி என்னருகில் அமர்ந்திருந்தார். பேருந்து ஓடத் துவங்கியவுடன், அவரது தலை பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விடுவது என்பது பொதுவாக நடக்கும் விஷயம் தான், குறட்டையும் உண்டு :)
அக்கால பேருந்துகளில், இருவர் அமரக்கூடிய இருக்கைக்கு நேர் எதிரே இன்னும் இருவர் அமரும் விதமாக, இருக்கை அமைப்பு இருந்தது. எங்கள் இருக்கைக்கு எதிரே, கோட் சூட் அணிந்த ஓர் ஆங்கிலக் கனவானும், நீண்ட கால்கள் கொண்ட சிற்பம் போல இருந்த அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். சாலையில் ஒரு மூதாட்டி முக்தி அடைவதை தடுக்கும் பொருட்டு, பேருந்து ஓட்டுனர் ஓர் அவசர பிரேக் அடித்ததில், என்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பத்திர வியாபாரி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல, அவ்வெள்ளைக்கார பெண்மணியின் தாராள மடியில் தஞ்சம் அடைந்தார் :)
நிலைமையை உணர்ந்த வியாபாரி, 'சாரி மேடம், சாரி மேடம்' என்பதை, ஏதோ ஒரு பிராயசித்த மந்திரத்தை ஜெபிப்பது போல் பல தடவை உச்சரித்தார்! "முதலில் எழுந்திரு மேன், அப்புறம் மன்னிப்பு கேளு" என்று கூறியபடி, அந்த ஆங்கிலேயப் பெண்மணி தனது மடியிலிருந்த வியாபாரியின் தலையை, ஒரு வீங்கிய பெருச்சாளியை அப்புறப்படுத்துவது போல, தனது இடது கையால் விலக்கித் தள்ளினார் ! பிறகு அப்பெண்மணி தனது ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டபோது, பழனி சிரிப்பை அடக்கிக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தார் :)
ஒரு மழைக்கால இரவில் கடைசிப்பேருந்தில் நானும் என் தந்தையாரும் பட்டணத்திலிருந்து பூந்தமல்லியில் உள்ள எங்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். தந்தையார் தூங்கி விட்டிருந்தார். 'பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை அடைவதற்குள் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் மழையில் நனைந்து விடுமே, என்ன செய்வது?' என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து மெல்ல நின்றது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது! எனது தந்தையாரை எழுப்பிய பழனி, நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதைத் தெரிவித்தார்.
சாலையில் என் பாதம் பட்டவுடன் தான் கவனித்தேன், எங்கள் வீட்டு வாசலிலேயே நாங்கள் இறக்கி விடப்பட்ட விஷயத்தை !!!
எ.அ.பாலா
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
12 மறுமொழிகள்:
Test Comment!
Nice translation and good article
நல்லதொரு மொழிபெயர்ப்பு...
இதிலுள்ள நகைச்சுவைதான் உங்களை மொழிபெயர்க்க தூண்டியதா அல்லது வேறு எதும் விசேச காரணம் உண்டா :-)
பகிர்ந்தமைக்கு நன்றி.
பழைய நினைவுகள் எப்போதும் சுவாரஸ்யமானவையே.நல்ல நகைச்சுவை...
// வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல, அவ்வெள்ளைக்கார பெண்மணியின் தாராள மடியில் தஞ்சம் அடைந்தார் :)
//
ஹாஹா. வாய் விட்டு சிரித்தேன்....:-))
இ.எ-இன் பக்கத்துக்கு உரல் கிடைக்குமா???
ஆங்கில மூலத்தின் சுட்டி:
http://www.appusami.com/v2/Default.asp?colsName=2&colsvalue=2740&hidtxtvid=134&catid=11
சுமாராய் 50-60 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் பேரூந்துப் பயணத்தை ஒரு குறும் படம் போல் கண் முன்னால் அருமை.
அதுவும் அந்த மழைக்காலம், நடத்துனர் பழனியின் அன்புக் கவனிப்பு.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
ஏங்க இதையெல்லாம் சொல்லி இப்ப பேருந்துல பயணிக்கிறவங்களோட வயத்தெறிச்சலை கொட்டிக்கிறீங்க?
இப்ப எல்லாம் நிறுத்தத்துலயே ஒழுங்கா நிறுத்தாம போறாங்க. வீட்டு வாசல்ல எல்லாம் இறக்கிவிடுறதையெல்லாம் நினைச்சுக்கூட பார்க்கமுடியாது.
நம்ம ஊர்ல பொது மக்கள் சேவையில் இருக்கும் பணியாளர்கள்,தாங்கள் செய்வது பொதுமக்கள் ஊழியம் என்பதையே மறந்து, நடந்து கொள்வதைப்பார்த்தால் ஓங்கி அரையலாம் போல இருக்கின்றது.
சென்னையில் ஒருமுறை பல்லவனில் நான் அதற்கு முன்னர் பயணித்திராத ஒரு தடத்தில் சென்ற போது, நடத்துநரிடம் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் போது சொல்லுங்கள் என்று வேண்டினேன், ஆனால் அவர் அதெல்லாம் தமது வேலையில்லை, அதை சொல்வதற்கெல்லாம் அரசாங்கம் ஊதியம் அளிக்கவில்லை என கோபமாக கூறினார். இதுதான் இந்த காலம்.
மனசு இருந்தா, என்ன வேணும்னாலும் செய்யலாம். இயந்திரத்தனமா வேலை பார்கிறவங்ககிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்?
வாசு,
நன்றி.
அபுல்,
நன்றி. நகைச்சுவையும், நாஸ்டால்ஜியாவும் காரணம்.
பிரேம்ஜி,
கருத்துக்கு நன்றி.
சி.பையன்,
ரசித்ததற்கு நன்றி. உரல் கொடுத்துள்ளேன்.
விஜய்,
பாராட்டுக்கு நன்றி.
ஜோசப்,
அந்தக் காலம் அந்தக் காலம். இப்போதுள்ள அவசர, பணத்துக்காக பேயாக அலையும் உலகத்தில், அன்னியோன்யமாவது, கருணையாவது :( எதற்கும் மனசு வேண்டும் என்று தாங்கள் கூறுவது மிகச் சரி.
எ.அ.பாலா
Nice :)
Post a Comment